தேர்தலில் தோல்வி அடைவதால் தங்களுக்கு எந்த இழப்பும் இல்லை என்றும் மக்களுக்கு தான் இழப்பு ஏற்படும் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கி உள்ள அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ், அச்செம்பேட் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைவதால் தங்களுக்கு எந்த இழப்பும் இல்லை என்றும் மக்களுக்கு தான் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார். மாநிலத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும் டிஆர்எஸ் கட்சியை புறக்கணித்தால் மக்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராத பாஜக முதலமைச்சர்கள் தான் தெலங்கானாவிற்கு பாடம் நடத்தி கொண்டு இருப்பதாகவும் சந்திர சேகர ராவ் குற்றம் சாட்டினார். தெலங்கானா மாநிலத்தை போராடி உருவாக்கியவர்களுக்கு அதனை வழிநடத்தவும் தெரியும் என்றும், இதனை ஒரு கடமையாக கருதியே, மக்களிடம் தெரிவிப்பதாகவும் சந்திர சேகர் ராவ் குறிப்பிட்டார். மேடையில் பேசிய அவர், “இந்தியா முழுவதும் பிரதமரின் மாநிலத்தில் கூட 24 மணி நேரமும் மின் வசதி கிடையாது. பாஜக முதலமைச்சர்கள் கூட இங்கு வந்து சொல்கிறார்கள். அவர்கள் ஆளும் மாநிலங்களில் குடிநீர் கூட கிடையாது.ஆனால் நமக்கு அறிவுரை கூறுவார்கள். அவர்களின் மாநிலங்களில் மின்சாரம் கூட கிடையாது. பயிர்கள் காய்கின்றன. ஆனால் அவர்கள் வந்து நமக்கு அறிவுரை சொல்வார்கள்’என்று தெரிவித்தார்.