ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷ் மனைவி ஆந்திராவில் கைது: கொலை செய்ய சொன்னது ஏன் என வாக்குமூலம்


பொற்கொடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை, ஆந்திராவில் போலீஸார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த வியாசர்பாடி எஸ்.எம்.நகரை சேர்ந்த அஸ்வத்தாமன்(32) கைது செய்யப்பட்டார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில், அவரது தந்தையான வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

இதையடுத்து, அஸ்வத்தாமன், அவரது தந்தை நாகேந்திரன் இருவரையும், காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அந்த விசாரணையின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை போலீஸார் தேடி வந்தனர். அவர் தலைமறைவானதையடுத்து, தனிப்படை அமைத்து போலீஸார் தேடினர்.

இந்நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த அவரை, தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை அடுத்த மாதம் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி பொற்கொடி சிறையிலடைக்கப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் கொலையாளிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறியது. அந்த வகையில் பொற்கொடி, தனது கணவர் ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலுவுக்கு முதல் தவணையாக ரூ.1.5 லட்சம் வரை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கொலைக்கு மறைமுக உதவிகளையும் பொற்கொடி செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தலைமறைவாக உள்ள பிரபல ரவுடிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இவர்கள் பிடிபடும் பட்சத்தில் கொலை திட்டத்தின் முழு விபரமும் வெளியாகும் என போலீஸார் தெரிவித்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்: இதற்கிடையே, பொற்கொடி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின் விவரம்: எனது கணவர் ஆற்காடு சுரேஷ் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவரைக் கண்டாலே எதிர் தரப்பினர் நடுங்கினர். இதை நான் கண்கூடாக பார்த்துள்ளேன். ஒரு கட்டத்தில் சென்னையில் அவருக்கு அச்சுறுத்தல் அதிகரித்தது. இதையடுத்து, எனது யோசனைப்படி அவர் சென்னையிலிருந்து சொந்த ஊரான ஆற்காடு பகுதியில் தங்கினார்.

இந்நிலையில்தான் கடந்தாண்டு அவர் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றம் சென்று விட்டு, பின்னர் உணவருந்த மாலை நேரத்தில் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு நண்பர்களுடன் காரில் சென்றார். இதை நோட்டமிட்டு எதிரிகள் கணவரை கொலை செய்தனர். இந்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கணவர் ஆற்காடு சுரேஷ் கொலையில் தொடர்புடையதாக பலர் கைது செய்யப்பட்டாலும், ஆம்ஸ்ட்ராங் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக எனக்கு நம்பத் தகுந்த தகவல் கிடைத்தது. ஆனால், இந்த வழக்கில் அவர் சேர்க்கப்படவில்லை. இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை கொலை செய்து பழி தீர்க்க வேண்டும் என சபதம் எடுத்தேன். நான் பெண் என்பதால் என்னால் தனியாக இச்செயலை செய்ய முடியவில்லை.

இதுகுறித்து கணவரின் தம்பியான பொன்னை பாலுவிடம் ஆலோசித்தேன். அவரும் சகோதரரை கொலை செய்தவர்கள், பின்னணியில் இருந்தவர்கள் என யாரையும் விடக்கூடாது என என்னைவிட அதிக உக்கிரத்தில் இருந்தார். ஆனால், அவரிடம் போதிய பணம் இல்லை.

இதையறிந்து எனது கழுத்தில் கிடந்த நகை மட்டும் அல்லாமல் என்னிடம் இருந்த நகைகளை கழற்றி பொன்னை பாலுவிடம் கொடுத்தேன். அதை விற்று கிடைத்த ரூ.1.5 லட்சத்தை வைத்து கொலைக்கான ஆரம்ப கட்ட வேலைகளை செய்ய சொன்னேன். கணவர் ஆற்காடு சுரேஷ் முதலாமாண்டு நினைவு தினத்துக்கு முன்னர் தீர்த்துக் கட்ட வேண்டும் என சபதம் எடுத்து அதை நிறைவேற்றினோம் என கைதான பொற்கொடி வாக்குமூலமாக கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல் பொன்னை பாலுவுடன் மேலும் பலர் கைகோர்த்து ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்து கட்டி உள்ளனர். அவர்களில் இன்னும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

x