ஓசூரில் தொடர் மழையால் தக்காளி விலை உயர்வு


பிரதிநிதித்துவப் படம்

ஓசூர்: தொடர் மழையால், ஓசூரில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

ஓசூர் சுற்று வட்டாரப் பகுதியில் விவசாயிகள் மலர் மற்றும் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். காய்கறி பயிரில் குறிப்பாக சந்தையில் அதிக விற்பனை வாய்ப்புள்ள தக்காளி, பீன்ஸ், கத்திரி, முள்ளங்கி, கீரை உள்ளிட்ட காய்கறிகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் ஓசூர் பத்தலப்பள்ளி சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரள மாநிலத்துக்கும் விற்பனைக்குச் செல்கிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாகக் காய் கறிகளின் விலை வழக்கத்தை விட குறைவாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பத்தலப்பள்ளி சந்தைக்குக் காய் கறிகள் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.

ஓசூர் உழவர் சந்தையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான நிலையில், நேற்று ரூ.35-க்கு விற்பனையானது. சில்லறைக் கடைகளில் தரத்துக்கு ஏற்ப ரூ.30 முதல் ரூ,45 வரை விற்பனையானது. இதேபோல மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்தது.

x