திமுக - பாஜக உறவு: ஸ்டாலின் Vs இபிஎஸ் “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றதால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை. நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல, இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எந்தவிதமான ரகசிய உறவும் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை” என்று அதிமுகவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் தந்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் பதவி சுகம் அனுபவிக்க வேண்டும், அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நம்பிய கட்சிகளுக்கு துரோகம் செய்வதே திமுகவின் வாடிக்கை என்பது மக்களுக்கு நன்கு தெரியும். 2004 முதல் 2013 வரை மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சி சுகத்தை அனுபவித்தவர்கள் திமுகவினர். தமிழகத்தில் 2006 முதல் 2011 வரை காங்கிரஸ் கட்சியின் தயவால் திமுக ஆட்சி நடத்தியது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை தற்போது மறந்தவர் ஸ்டாலின் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.
பாஜகவுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் முதல்வர் சொன்னபோது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் அல்ல, ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை திமுக முதல்வருக்கு மூளை இருக்கிறதா என்று கேட்க வேண்டும். டெல்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் நியமனம்: தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, முதல்வரின் தனிச் செயலராக இருந்த நா.முருகானந்தம், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே நா.முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தமிழகத்தின் 50-வது தலைமைச் செயலர் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார்.
1991 ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்த முருகானந்தம் தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சென்னையை சேர்ந்த இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் சார் ஆட்சியராக தனது பணியை தொடங்கினார்.
அதேபோல், தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலினின் இணைச் செயலராக ஜி.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த அவர் இந்தப் புதிய பதவியில் பணியர்மர்த்தப்படுவதால் தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நா.முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.
ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கோரி முதல்வர் கடிதம்: “தமிழகத்தில் புதிய ரயில்வே வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்,” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திங்கள்கிழமை வெளியிட்டார். ஆகஸ்ட் 21-ஆம் தேதி மருத்துவ தேர்வு குழு மூலமாக கலந்தாய்வு தொடங்க உள்ளது.செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 150 மாணவர்கள் கூடுதலாக சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரை 9,800 எம்பிபிஎஸ், 2150 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த இடங்களுக்கு 43 ஆயிரத்து 63 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் ஆகும். அதேபோல அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் 3683 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் என 4 வகை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது” என்றார்.
ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி கைது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆந்திராவில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை சென்னை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
4-வது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை: பெண் மருத்துவர் கொலை வழக்கில் கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் சந்தீப் கோஷ் மீதான சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், அவரிடம் தொடர்ந்து 4-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பல்வேறு கோணத்தில் கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
மருத்துவரின் மரணம் பற்றிய செய்தி கிடைத்ததும், நீங்கள் யாரைத் தொடர்பு கொண்டீர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை ஏன் மூன்று மணி நேரம் காத்திருக்க வைத்தீர்கள், இச்சம்பவத்துக்குப் பிறகு செமினார் ஹாலுக்கு அருகே உள்ள அறைகளை சீரமைக்க உத்தரவிட்டது யார் என அவரிடம் கேள்விகள் எழுப்பி, விசாரணையும் நடத்தப்பட்டது. அவரது செல்போன் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அவர் செல்போனில் யாரிடம் பேசினார், என்ன பேசினார் என்பன குறித்த விவரங்களை சிபிஐ அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.
மேற்கு வங்க அமைச்சர் சர்ச்சைப் பேச்சு: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நோக்கி கைநீட்டி பேசுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்று திரிணமூல் அமைச்சர் உதயன் குஹா பேசிய காணொலி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு அடங்கிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, திரிணாமூல் காங்கிரஸின் ‘தலிபான்’ மனநிலையை இது காட்டுகிறது என்று விமர்சித்துள்ளது.
இதனிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாகவும், கொல்கத்தா மருத்துவனையில் பாலியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறி கீர்த்தி சர்மா என்ற கல்லூரி மாணவியை கொல்கத்தா போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஆளுநர் அனுமதியை எதிர்த்து சித்தராமையா வழக்கு: முடா ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் தன்னை விசாரிக்க ஆளுநர் அனுமதி அளித்ததை எதிர்த்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பர்கூரில் பள்ளிச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பர்கூர் அருகே பள்ளியில் நடந்த என்சிசி முகாமுக்குச் சென்ற 8-ம் வகுப்பு மாணவி, பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பயிற்சியாளர், தாளாளர், முதல்வர் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள சிவராமன், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த நிலையில், தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து: “பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்களை எதிர்க்கின்ற அணியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே இருக்கும்,” என கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும், “பாஜகவுடன் இணக்கமாக செல்லும் முடிவை திமுக எடுக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.