ஈரோடு: கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வியாபாரிகள் வருகை குறைந்து, ஈரோடு ஜவுளிச் சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் ஆகிய பகுதிகளில் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க் கிழமை மாலை வரை வார ஜவுளிச் சந்தை நடக்கிறது. சந்தைக்கு ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள், ஜவுளி மொத்தக் கொள்முதல் செய்வது வழக்கம். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் ஈரோடு ஜவுளிச் சந்தையில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையிலும், வெளி மாநில வியாபாரிகள் வருகை தொடங்கவில்லை. இதோடு, தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருவதால், நேற்று நடந்த ஜவுளிச் சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது.
இது குறித்து ஜவுளிச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது: தேர்தல் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் வியாபாரிகள் வருகை மிகக் குறைவாகவே இருந்தது. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை.
இதனால் மொத்த வியாபாரம் 20 சதவீதம், சில்லறை வியாபாரம் 25 சதவீத அளவில் மட்டுமே நடந்தது. தேர்தல் மற்றும் மழை காரணமாக கோடைக்காலத்தில் விற்பனையாக வேண்டிய பருத்தி ஆயத்த ஆடைகள், உள்ளாடைகள், துண்டு, லுங்கி போன்றவை விற்பனையாகாமல் தேங்கியுள்ளன, என்றனர்.