சிவகங்கை: சிவகங்கை அருகே உப்பாற்றில் 300-க்கும் மேற்பட்ட இறந்த கோழிகளை மர்மநபர்கள் வீசிவிட்டு சென்றனர். இதனால் ஏற்பட்ட துர்நாற்றத்தால் கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
சிவகங்கை அருகே நல்லாகுளம், நாட்டாகுடி வழியாக உப்பாறு செல்கிறது. இந்நிலையில், நாட்டாகுடி கிராமத்துக்கு செல்லும் வழியில் உப்பாற்றில் 300-க்கும் மேற்பட்ட இறந்த பிராய்லர் கோழிகளை மர்ம நபர்கள் வீசிவிட்டு சென்றனர். அவற்றை நாய்கள் உட்கொண்டு வருகின்றன. மேலும், இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் நாட்டாகுடி கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: “சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உப்பாற்றில் இறந்த கோழிகளை கொட்டிவிட்டு சென்றுள்ளனர்.
அந்த கோழிகள் என்ன நோயால் இறந்துள்ளன என்று தெரியவில்லை. அவற்றை நாய்கள் திண்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.ஏற்கெனவே இதேபோல் ஆற்றில் குப்பைகளை கொட்டிவிட்டுச் சென்றனர். மதுரை-தொண்டி சாலை அருகே ஆறு இருப்பதால் தொடர்ந்து கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதேநிலை நீடித்தால் ஆறு மாசடைந்துவிடும். ஆற்றில் தான் ஊற்று தோண்டி குடிநீர் எடுத்து வருகிறோம். இதனால் இறந்த கோழிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர்கள் கூறினர்.