திருவாரூர்: தமிழக முதல்வரின் அமெரிக்க பயணத்தின் மூலமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு ஏற்பட உள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில் ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை இன்று (ஆக.19) நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, கூடுதல் ஆட்சியர் ப்ரியங்கா, நாகை எம் பி வை.செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, மற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டிஆர் பி.ராஜா கூறுகையில், “திருவாரூர் மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ரூ.1,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி மூலம் இந்த டெல்டா மாவட்டம் முழுமைக்கும் பயனடைய உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் காலத்தில் சொன்ன வாக்குறுதிகள் 75 சதவிகிதம் நிறைவேற்றி விட்டோம்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தை அதிமுகவினர் விமர்சனம் செய்வதை தவிர வேறு ஏதும் அவர்களுக்கு தெரியாது. முதல்வரின் அமெரிக்க பயணத்தின்போது ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதன்மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. முதல்வரின் இந்த அமெரிக்க பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நடைபெற்று வரும் திட்ட பணிகளை விரைவாக முடித்து, மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.