புரட்டாசி திருவிழா: சேலம் சென்றாயப் பெருமாள் கோயிலில் அடிப்படை வசதிகளை செய்து தர ஐகோர்ட் உத்தரவு


சென்னை: புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு சேலம் சென்றாயப் பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "சேலம் மாவட்டம் கோனக்கரடு சென்றாயப்பெருமாள் மலைக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. புரட்டாசி மாதம் போன்ற விசேஷ காலத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த கோயிலுக்கு மலையேறி வரும் பக்தர்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை.

குறிப்பாக கோயிலுக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைப்பேறு பெற்றவர்கள் அதிகமாக வந்து செல்லும் இந்த கோயிலில் பெண்களுக்கான பாதுகாப்பும், உயிர் காக்கும் கருவிகளும், சுகாதார வசதிகளும் கேள்விக்குறியாகி உள்ளது. மலையேற்றத்தின்போது அசம்பாவிதம் நிகழ்ந்தால் மீட்பு மற்றும் முதலுதவி பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளது. கோயிலுக்கு செல்லும் வழித்தடம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பாதையும் குறுகிப் போய் உள்ளது.

இதனால் செயற்கையான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே புரட்டாசி மாதம் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும்படி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனக்கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான ராதாகிருஷ்ணன் ஆஜராகி, அந்தக் கோயிலுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். அதற்கு அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கார்த்திகேயன், சென்றாயப்பெருமாள் கோயிலில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அறநிலையத்துறை ஆணையருக்கு, தமிழக அரசின் பொதுத்துறை செயலர் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தை தாக்கல் செய்தார்.

மேலும், வரும் ஆக.24 அன்று அந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கான செயல் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க சேலம் வட்டாட்சியர் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, "அந்தக் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தாரவிட்டார்.

x