நில அபகரிப்புக்கு உடந்தை: திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ-வை வழக்கில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: நில அபகரிப்புக்கு உடந்தையாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திருப்பத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ-வான நல்லதம்பியையும் வழக்கில் சேர்க்க அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், 'தங்களது நிலத்துக்கு அருகில் உள்ள நிலத்தை வாங்கிய பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரேமா, தங்களது நிலத்துக்கும் சேர்த்து பட்டா கோரியிருந்தார். இதை எதிர்த்து வட்டாட்சியரிடம் அளித்த புகார் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பியின் தலையீட்டின் காரணமாக எங்களது நிலத்துக்கு, பிரேமாவுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களது நிலத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ-வான நல்லதம்பிக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், அவரையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, இந்த வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

x