‘அரசு நிதி வழங்காததால் போக்குவரத்து கழகங்கள் நெருக்கடியில் உள்ளன’ - போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை


சென்னை: வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் திங்கள்கிழமை முழக்கமிட்டனர்.

15-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை சரி செய்து, மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 25 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

வாரிசு வேலை தர வேண்டும், ஓய்வூதியர்களுக்கு 105 மாதங்களாக வழங்காத அகவிலைப்படி உயர்வை வழங்குவதோடு, மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஒப்பந்த நியமனம், தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வாயிற்கூட்டம் சென்னை பல்லவன் இல்லம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிஐடியு, ஏஐடியுசி, எம்எல்எஃப், டிடிஎஸ்எஃப், ஏஏஎல்எல்எஃப் ஆகிய சங்கங்களின் கூட்டமைப்பு தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்கு இடையே செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: ''புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில், அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஒரு பொது கோரிக்கையை உருவாக்கி உள்ளோம். அந்த பொது கோரிக்கையை விளக்கும்வகையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, போக்குவரத்து துறை சேவை துறை என்ற அடிப்படையில், அரசு நிதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், அரசு நிதி வழங்காததால், போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. தொழிலாளர்கள் பணம் ரூ.15,000 கோடி எடுத்துசெலவு செய்யப்பட்டுவிட்டது. தொழிலாளர்கள் ஓய்வுபெற்று 20 மாதங்கள் கடந்த பிறகும், பணப்பலன் கிடைக்கவில்லை. இதுதவிர, பல்வேறு கோரிக்கைகளை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னெடுக்க உள்ளோம். இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர், துறைச் செயலாளர் ஆகியோரை சந்தித்து மனு அளித்துள்ளோம். அரசு எங்கள் கோரிக்கை மீது பேச்சுவார்தை நடத்தி, பிரச்னைகளை தீர்க்க வேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.

எம்எல்எப் மாநிலச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வி.சசிக்குமார், வி.தயானந்தம் (சிஐடியு) உள்பட பலர் பேசினர்.

x