சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயின் சமூகத்தினருடன் சென்னையில் இன்று ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடினார்.
மதங்களைத் தாண்டிய மனிதநேய திருவிழாவாக, சகோதரத்துவத்தை உணர்த்தும் விதமாக, இந்தியா முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பெண்கள் பலரும் தங்களது சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் என சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர்களது கையில் ராக்கி கயிற்றை கட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இத்திருவிழாவின் ஒரு பகுதியாக சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஜெயின் சமூகத்தினர் சார்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமியை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து ராக்கி கயிற்றை கையில் கட்டியும் சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.