பொருளாதார குற்ற காவல் பிரிவில் ஆட்கள் பற்றாக்குறை: நியோ மேக்ஸ் புகார் மீதான அறிக்கை வழங்குவதில் தாமதம்!


மதுரை: மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் ஆள் பற்றாக்குறையால் நியோமேக்ஸ் வழக்கின் புகார்தாரர்களின் மனுக்கள் தொடர்பான அறிக்கை அளிக்க தாமதம் ஏற்படுவதாக முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் முதலீட்டுத் தொகைக்கு இரட்டிப்புத் தொகை வழங்குவதாகக்கூறி தென்மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து ஏமாற்றியதாக புகார்கள் எழுந்தன.

மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 35-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் ஏராளமான புகார்கள் குவிந்தன. புகார் அளித்தவர்களுக்கு முதலீட்டு விவரங்கள் அடங்கிய அறிக்கை நகலை காவல்துறையினர் வழங்கு கின்றனர்.

காவல்துறையினர் பற்றாக் குறையால் அறிக்கை கிடைக்க தாமதமாவதால், விரைந்து வழங்க வேண்டும் என முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த முதலீட்டாளர் பார்த்தசாரதி கூறியதாவது: நியோமேக்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு செட்டில்மென்ட் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. முடிந்தவரை பணமாகவோ அல்லது நிலமாகவோ பெறுவதற்கு நாங்களும் தயாராகிவிட்டோம். இதை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸ் வழியாகவே பெற முடியும்.

இதைப்பெற புகார் மனு மீதான அறிக்கை நகல் முக்கியம் என்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் புகார் கொடுத்துள்ள நிலையில், 1000-க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே அறிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது. நான் 6 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தும் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. போலீஸார் பற்றாக்குறையே முக்கிய காரணம், என்றார்.

ரூ.300 கோடி முறைகேடு: பொருளாதாரக் குற்றத் தடுப்பு காவல்துறையினர் கூறுகையில், ‘முதலீட்டாளர்களின் புகார் விவர அடிப்படையில் அறிக்கை நகல் வழங்கப்படுகிறது. பணியில் இருக்கும் காவலர் களை வைத்து முடிந்த அளவுக்கு வழங்குகிறோம். இதுவரை சுமார் 3 ஆயிரம் பேர் அளித்த புகாரின்படி ரூ.300 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக விசாரணையில் தெரிகிறது.’ என்றனர்.

x