மதுரை: மதுரை நகைக்கடை பஜாரில் டூ வீலர்களை சேதப்படுத்தி ‘அட்ராசிட்டி’ செய்த கும்பல் பற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் தெற்கு ஆவணி மூலவீதி நகைக்கடை பஜார் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று இந்த பஜார் வழியாகச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கு நிறுத்தி இருந்த டூ வீலர்களை கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர். இதை அப்பகுதி நகைக் கடை உரிமையாளர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அதற்கு, குடிபோதையில் இருந்த அக்கும்பல் ஆபாசமாக பேசியதோடு, ஹெல்மெட், இரும்பு வாளிகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து நகைக்கடை உரிமையாளர்களை தாக்கியுள்ளது.
இச்சம்பவத்தை வீடியோ பதிவு செய்த நபரின் செல்போனையும் அந்தக் கும்பல் பறித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஒன்றுக்கூடி அந்தக் கும்பலை விரட்டிப் பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களிடம் சிக்காமல் அந்தக் கும்பம் தப்பியோடி இருக்கிறது. போதைக் கும்பல் நடத்திய தாக்குதலில் நகைக்கடை உரிமையாளர் கார்த்திக் என்பவர் காயமடைந்தார்.
உடனடியாக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், தெற்கு வாசல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், நகைக்கடை உரிமையாளரை கும்பல் தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் நடந்துள்ள இந்த தாக்குதல் சம்பவம் மதுரை நகைக்கடை பஜாரில் உள்ள வியாபாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியும் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருவதால் இதை முடிவுக்குக் கொண்டு வர காவல்துறையினர் இப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்கிறார்கள் நகைக்கடை உரிமையாளர்கள்.