மதுரையில் மாயமான பேராசிரியரின் மாமியார், மைத்துனர்: கண்டுபிடித்துத் தரக்கோரி போலீஸில் புகார்


மாதிரிப் படம்

மதுரை: மாயமான சென்னை லயோலா கல்லூரி பேராசிரியரின் மாமியார் மற்றும் மைத்துனரை கண்டுபிடித்துத் தரக் கோரி போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர், சேவியர் மகிமைராஜ். இவரது மாமனார் அம்புரோஸ் விருதுநகர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது வீடு மதுரை பி.பி.குளம் பகுதியில் உள்ளது. அம்புரோஸ் கடந்த ஜூன் 15-ல் காலமானார். இதையடுத்து அவரது மனைவியும், ஓய்வுபெற்ற அரசு ஊழியருமான சேவியர் மேரியும் அவரது மகன் அருமைராஜாவும் மதுரை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், வீட்டில் இருந்த இருவரையும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் திடீரென காணவில்லை. அவர்கள் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியில் புறப்பட்டுச் சென்றதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர், பேராசிரியர் சேவியர் மகிமைராஜூக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து மதுரை வந்த சேவியர் மகிமைராஜ், இருவரின் செல்போனுக்கும் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், அவர்களது செல்போன் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இருவரும் எங்கு சென்றார்கள் எனத் தெரியவில்லை.

இந்த நிலையில் அவர்களை ஏற்றிச் சென்ற கால் டாக்சி ஓட்டுநரிடம் விசாரித்தபோது, இருவரையும் மதுரை விமான நிலையத்தில் இறக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். இருவரும் வெளிநாடு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இருவரையும் கண்டுபிடித்து கொடுக்குமாறு தல்லாகுளம் காவல் நிலையத்தில் பேராசிரியர் சேவியர் மகிமைராஜ் புகார் அளித்துள்ளாார். அதன்பேரில் போலீஸார், மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.

x