புதிய தலைமைச்செயலராக முருகானந்தம் பொறுப்பேற்றார் | கடந்து வந்த பாதை


சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச்செயலராக முதல்வரின் செயலராக இருந்த நா.முருகானந்தம் இன்று பொறுப்பெற்றுக் கொண்டார்.

தமிழக தலைமைச் செயலராக இருந்த வெ.இறையன்பு ஓய்வு பெற்ற நிலையில், கடந்தாண்டு தமிழகத்தின் தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இவர் வரும் அக்டோபர் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழக தலைமைச்செயலராக, முதல்வரின் செயலர் நிலை -1 ஆக இருந்த நா.முருகானந்தம் இன்று காலை நியமிக்கப்பட்டு, உடனடியாக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதே போல், ரியல் எஸ்டேட் ஓழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனாவும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக தலைமைச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள, நா.முருகானந்தம், சென்னையைச் சேர்ந்தவர். கடந்த 1991 ம் ஆண்டு நேரடி ஐஏஎஸ் அதிகாரி. கணினி அறிவியலில் இளநிலை பொறியியல் பட்டம் மற்றும், எம்பிஏ முடித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் துறை இயக்குனர், ஊரக வளர்ச்சித்துறை இணை செயலர் பொறுப்புகளை வகித்துள்ளார். அதன்பின், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையராகவும், தமிழக நிதித்துறை செயலராகவும் பணியாற்றினார். கடந்தாண்டு முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது தலைமைச் செயலராக பொறுப்பேற்றுள்ளார்.

இணை செயலர் நியமனம்: இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஜி.லட்சுமிபதி, முதல்வரின் இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக, பொது நூலகத்துறை இயக்குனராக உள்ள கே.இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

x