ஊத்துக்குளி அருகே தொடர் மழை காரணமாக 52 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குறிச்சிக்குளம்


தொடர் மழை காரணமாக ஊத்துக்குளி அருகே நீர் நிரம்பி காணப்படும் குறிச்சிக்குளம்.

திருப்பூர்: தொடர் மழையால் ஊத்துக்குளி அருகே 52 ஆண்டுகளுக்கு பிறகு குறிச்சிக்குளம் நிரம்பியது.

ஊத்துக்குளி ஒன்றியம் குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட குறிச்சிக் குளம் அதிக மழைப் பொழிவால் நிரம்பி வழிந்ததை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, ‘‘திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தில் 118.70 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக அவிநாசி வட்டத்தில் 24 மி.மீ., ஊத்துக்குளி வட்டத்தில் 13 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

கன மழை காரணமாக குறிச்சிக்குளம் தற்போது நிரம்பியுள்ளது. இந்த குளத்தின் மொத்த பரப்பளவு 36 ஏக்கர். 1972-ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது தான் குறிச்சிக்குளம் நிரம்பி வழிந்து காணப்படுகிறது. அந்த வகையில் குளம் நிரம்பியதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குளம் நிரம்பியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்’’ என்றார்.

இந்த ஆய்வின் போது, ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், மகேஸ்வரன், உதவி பொறியாளர் சரவணக் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

x