திமுக - பாஜக ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகிவிட்டது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கருத்து


கோவை / பல்லடம்: ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதன் மூலம், திமுக-பாஜக ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் பாஜக பங்கேற்கும். நீங்கள் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். உடனே, ஆளுநரி்ன் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றார். இதன் மூலம் திமுக - பாஜகவின் ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நாணயம் வெளியிட்டோம். பாஜக கூட்டணியில் இருந்தபோதும், அவர்களை அழைக்கவில்லை. ஏன் இவர்கள் ராகுல் காந்தியை அழைத்து நாணயத்தை வெளியிடவில்லை? தமிழகத்தைப் பற்றிக் கவலைப்படாத கட்சி திமுக. அவர்களுக்கு வேண்டியது அதிகாரம், பதவி. அதற்காகத்தான் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மேம்பாலப் பணிகளும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாதகவுண்டன்பாளையத்தில் உழவர் காவலர் என்று போற்றப்படும் முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.பழனிசாமியின் மணிமண்டபம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மணி மண்டபத்தை திறந்துவைத்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது:

உழவர் சமுதாயத்துக்காக வாழ்ந்தவர் கிணத்துக்கடவு தொகுதி முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.பழனிசாமி. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த காலகட்டத்திலும், உழவர்களின் பிரச்சினையை பேரவையில் தொடர்ந்து வலியுறுத்தியவர் என்.எஸ்.பழனிசாமி.

விவசாயிகளின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை நான் முதல்வரான பின்பு நிறைவேற்றினேன். மாநில நிதியில் ரூ.1,653 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. 2021 வரை 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு எஞ்சிய 10 சதவீதப் பணிகளை 6 மாதத்தில் முடித்திருக்கலாம். ஆனால், அதிமுக திட்டம் என்பதால் கிடப்பில் போட்டுவிட்டனர். இரண்டரை ஆண்டு காலம் தாமதமாக இந்த திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

காவிரி - குண்டாறு திட்டத்தை நாங்கள் கொண்டுவந்தோம். அதையும் கிடப்பில் போட்டுவிட்டனர். அதிமுக ஆட்சியில் பல்வேறு ஓடை, நதிகளின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டினோம். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

விழாவில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி.ராமலிங்கம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x