பட்டியலினத்தை சேர்ந்தவர் முதல்வரானால் வரவேற்போம்: மமக தலைவர் ஜவாஹிருல்லா கருத்து


திருச்சி: தமிழகத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவர் முதல்வரானால் வரவேற்போம் என்று மனிதநேயமக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கூறினார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் இளைஞரணி மாநில செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஜவாஹிருல்லா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: நாடு முழுவதும் உள்ள 9.4 லட்சம் ஏக்கர் வக்பு நிலங்களை அபகரிக்கவே, வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை பிரதமர் கொண்டுவந்தார். ஆனால், இண்டியா கூட்டணியின் கண்டனம் மற்றும் பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆட்சேபனை காரணமாக அந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி, பிரதமர் மோடி பேசியது, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிராகவும், வேற்றுமையில் ஒற்றுமைக்கு எதிராகவும் உள்ளது.

திருமாவளவன் எந்த சூழ்நிலையில் பட்டியலினத்தவர் முதல்வராக வர முடியாது என்று சொன்னார் என்பதை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல், அவர் பேசிய ஒரு கருத்தை மட்டும் முன்வைத்து பரப்புரை செய்வது தவறு. தமிழகத்தில் பட்டியலினத்தவர் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் முதல்வரானால் வரவேற்போம். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

x