டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுத்தது சட்ட விரோதம்: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு


கோவை: வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் காரமடை மற்றும் பொள்ளாச்சியில் டிராக்டர் பேரணிக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.

இதைக் கண்டித்து, கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தமிழக இணை ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.பாபு தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் முன்னிலை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டிராக்டர் பேரணி அமைதியான முறையில், காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் காரமடை மற்றும் பொள்ளாச்சியில் மட்டும் அனுமதி அளிக்க மறுத்ததுடன், விவசாயிகள் மீது காவல் ஆய்வாளர்கள் தாக்குதல் நடத்தி, வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

அடுத்தகட்ட போராட்டம்: நீதிமன்றம் அனுமதி அளித்தபின்பும் டிராக்டர் பேரணிக்கு காவல் துறையினர் அனுமதிக்க மறுத்தது சட்ட விரோதமானது. தவறு செய்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வரும் 27-ம் தேதி திருச்சியில் நடைபெறும் சங்கக் கூட்டத்தில், அடுத்தகட்ட போராட்டங்களைத் தீவிரப்படுத்துவது குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x