தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு


சென்னை: சென்னை விம்கோநகர் - விமானநிலைய மெட்ரோ ரயில் வழித்தடத்தில் நேற்று பகல் 12.50 மணிக்கு திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விம்கோநகர் - விமானநிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பொறியாளர்கள் விரைந்து வந்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், இந்த வழித்தடங்களில் 15 முதல் 20 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் என தாமதமாக இயக்கப்பட்டது. இந்த ரயில்களும் ஆங்காங்கே 5 முதல் 10 நிமிடம் வரை ஒவ்வொரு நிலையத்திலும் நின்று சென்றன. மேலும், சென்ட்ரல் - விமான நிலையம் இடையே பச்சை வழித் தடத்தில் நேரடி மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர் , சென்ட்ரல் - பரங்கிமலை, விம்கோ நகர் - விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை மதியம் 1.35 மணிக்கு சீரானது.

பிற்பகல் 2.10 மணிக்கு தொழில்நுட்பகோளாறு முற்றிலுமாக சரிசெய்யப்பட்டது. இதையடுத்து, சென்ட்ரல் - விமான நிலையம் இடையே நேரடி சேவை வழக்கம்போல தொடங்கியது. மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் ஒரு மணி நேரம் மிகுந்த சிரமத்தை சந்தித்தினர்.

x