கொடைக்கானலில் மீண்டும் தலைதூக்கும் போதை காளான்: சுற்றுலா பயணிகளை குறிவைக்கும் கும்பல்


திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து ‘மேஜிக் மஸ்ரூம்’ எனும் போதை காளான் விற்பனை அதிகரித்துள்ளது. சுற்றுலா வரும் இளைஞர்கள் பலர் இதற்கு அடிமையாவதை தவிர்க்க கடும் நடவடிக்கை எடுக்க போதை பொருள் தடுப்பு போலீஸார், உள்ளூர் போலீஸார் இணைந்து பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கொடைக்கானல் சுற்றுலா தலம், போதை தலமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோடை வாசஸ்தலங்களில் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குவதால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இயற்கை எழிலை பலரும் ரசித்து செல்லும் நிலையில், இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு எங்கும் கிடைக்காத மேஜிக் மஸ்ரூம் எனப்படும் போதை காளானை தேடி வருவதும் அதிகரித்துள்ளது.

மேஜிக் காளான் எனும் போதை காளான்: கொடைக்கானல் மலைப்பகுதி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே இந்த போதை காளான் காணப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதியில் வளரும் காளான் முதலில் அபூர்வமாக அங்கொன்றும் இங்கொன்றும் காணப்பட்டது. வனப்பகுதிக்குள் விறகு எடுக்க செல்பவர்களிடம் இதுபோல் காளான் இருந்தால் எடுத்து வரச்சொல்லி சிலர் போதை களானை பெற்று வந்தனர். ஒரு சிலர் மட்டுமே இந்த போதை காளான் குறித்து அறிந்து, அதை விற்பனை செய்யும் செயலில் ஈடுபட்டனர்.

இதையறிந்து பலரும் இதில் வருவாய் பார்க்க துவங்கியதன் விளைவு, விற்பனை செய்பவர்களே நேரடியாக மலைப்பகுதிகளில் தேடி அலைந்து போதை காளானை பறித்து வரும் நிலை ஏற்பட்டது. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் போதை காளான் விற்பனை அதிகரிக்க துவங்கியது.

போதை அடிமையானவர்கள் பல்வேறு வகையான போதைகளை அனுபவிக்க முயல்வது போல், எங்கும் கிடைக்காத கொடைக்கானலில் மட்டுமே கிடைக்கும் போதை காளானை தேடி இளைஞர்கள் பலரும் வரத் துவங்கினர். இதன் விளைவு சுற்றுலா பயணிகள் போர்வையில் போதை நபர்கள் கொடைக்கானல் சுற்றுலாத் தலத்தை படிப்படியாக போதை தலமாக மாற்ற முயலும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக போலீஸாரின் தீவிர வேட்டையில் ஏரி சாலை, பாம்பார்புரம், பேரிபால்ஸ் உள்ளிட்ட பகுதியில் கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில கல்லூரி இளைஞர்களை குறிவைத்து போதை காளான் விற்க முயன்ற மலை கிராமத்தை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர்.

போதை நபர்கள் மத்தியில் போதை காளானுக்கு மவுசு அதிகரித்ததையடுத்து மலை கிராமத்தில் வசிக்கும் சிலர் போதை காளான்களை தேடி மலைப்பகுதிக்கு சென்று பறித்துவந்து விற்பனை செய்கின்றனர். சிறிய அளவில் இருக்கும் காளான் 12 எண்ணிக்கை ரூ.500-க்கு விற்பனை செய்கின்றனர். இதை ஒரு சிறு வியாபாரமாகவே சிலர் சுற்றுலா பயணிகளை குறிவைத்து துவங்கிவிட்டனர். சுற்றுலாபயணிகள் தங்கும் லாட்ஜ்களிலேயே போதை காளான் எங்கு கிடைக்கும் என இளைஞர்கள் விசாரிக்க துவங்கி விடுகின்றனர். இவர்களுக்கு வழிகாட்டுதல் வேறு.
போதை காளான் குறித்து வலைதளங்களில் தற்போது அதிகம் பரவுவதால் தான் தற்போது கிராக்கி ஏற்பட்டுள்ளது.

போதை காளானுக்கு வெளிமாநில இளைஞர்கள் அதிகம் அடிமையாகியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக போலீஸாரின் தீவிர நடவடிக்கை இந்த போதை பொருளை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் அனுமதியில்லாமல் உள்ள தங்கும் விடுதிகள், பாதுகாப்பு இன்றி செயல்படும் குடில்கள் என இருக்கும் இடத்திற்கே சென்று போதை காளான் விநியோகம் நடக்கிறது என்பதால் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது சிரமமான காரியமாகவே போலீஸாருக்கு உள்ளது.

மேஜிக் மஸ்ரூம் எனும் போதை காளான்: போதை காளானை முட்டையுடன் சேர்த்து ஆம்லேட்டாக உட்கொள்கின்றனர். இதில் உள்ள சைலோசின் என்ற வேதிப்பொருள் உட்கொள்பவர்களை மயக்க நிலைக்கு கொண்டு செல்கிறது. இதனால் மாயத்தோற்றம் ஏற்பட்டு போதையை அனுபவிக்கின்றனர். போதை காளான் விற்பவர்கள், வாங்குபவர்களை கைது செய்தாலும் அவர்களை தண்டிக்க முறையான சட்டப்பிரிவு இல்லை. இதனால் கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் வெளிவரும் நிலை தான் உள்ளது. போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சில மாதங்கள் கொடைக்கானல் பக்கம் தங்கள் பார்வையை செலுத்தினால் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

x