'நயினார் நாகேந்திரனுக்கு எம்.பி சீட் கொடுத்தால்?'...பாஜகவை எச்சரிக்கும் போஸ்டரால் பரபரப்பு!


நயினார் நாகேந்திரனுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு சீட் கொடுத்தால் அங்கு பாஜக படுதோல்வி அடையும் என அந்தக் கட்சியை எச்சரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன்

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தலில் போட்டியிட முக்கிய கட்சிகளில் சீட் பெற பலரும் முயன்று வருகின்றனர். பாஜகவில் சிட்டிங் எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன், மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக உள்ளார். அத்துடன் பாஜகவில் இரண்டாம் கட்டத் தலைவராகவும் நயினார் நாகேந்திரன் உள்ளார்.

நயினார் பாலாஜி

பாஜக மாநில துணைத் தலைவராகவும், பாஜக சட்டமன்றக்குழு தலைவராகவும் உள்ள அவர் தற்போது மக்களவை உறுப்பினராக வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளார். நெல்லை தொகுதியில் நல்ல செல்வாக்குடன் இருக்கும் தான், இந்த முறை நின்றால், நிச்சயம் வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். மேலும் தேர்தலில் வென்றால், மத்திய அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்ற திட்டத்தில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்சியிலும், தனக்கு என்றால் சீட் மறுக்கப்படாது என்ற நம்பிக்கையில் நெல்லைத் தொகுதியில் பணிகளையும் அவர் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. எம்எல்ஏவாக இருக்கும் தனக்கு ஒருவேளை சீட் மறுக்கப்பட்டால் தனது மகன் நயினார் பாலாஜிக்கு சீட்டை பெறும் எண்ணத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் நயினார் நாகேந்திரனுக்கு கடும் அதிர்ச்சியளிக்கும் வகையில், அவருக்கு எம்.பி சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி செயலாளர் பந்தல்ராஜா என்பவர் சார்பில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டர்களில், "புறக்கணிக்காதே..! புறக்கணிக்காதே..! வெள்ளாளர்களைப் புறக்கணிக்காதே! பெரும்பான்மையாக வாழ்கின்ற வெள்ளாளர் சமுதாயத்தை பாஜக புறக்கணிக்கிறதா? நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்.பி சீட்டா? வெள்ளாளர்களே விழித்து கொள். திருநெல்வேலி எம்.பி தொகுதியில் எங்கள் சமூக வேட்பாளரை நிறுத்தாவிட்டால் பாஜக படுதோல்வியைச் சந்திக்கும், எச்சரிக்கிறோம்." என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடலாம் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணியாற்றி வரும் நயினார் நாகேந்திரனுக்கு சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x