யாருடன் கூட்டணி?... இன்று முடிவு செய்கிறது பாமக!


பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

எதிர்வரும் ம்க்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனைகளை மேற்கொள்ள பாமக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது.

தைலாபுரம் தோட்டம்

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்படைந்துள்ளன. இந்திய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் கூட்டணி பேச்சு வார்த்தைகள் சூடு பிடித்துள்ளன. தமிழ்நாட்டிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிக்கு குழுக்கள் அமைத்து தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் வலுவாக உள்ள கட்சியான பாமகவும் தற்போது தேர்தல் பணிகளில் தீவிரமாக காட்டத் தொடங்கியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் தொடர்பாக பாமக நிர்வாகிகளுக்கு அதன் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

மருத்துவர் ராம்தாஸ்

ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் எதிர் வரும் மக்களவை பொதுத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என மருத்துவர் ராமதாஸ், கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க உள்ளதாகவும், அதன் அடிப்படையில் கூட்டணி குறித்தான முடிவை மருத்துவர் ராமதாஸ் எடுப்பார் என்றும் பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் பாமக இடம் பெறலாம் என்று யூகம் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அக்கட்சிக்கு அதிமுக கூட்டணியிலிருந்து தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பாஜகவும் தங்கள் கூட்டணியில் பாமகவை இழக்க மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் பாமக எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்பது தமிழக அரசியலில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

x