“போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு...” - பிறந்தநாள் விழாவில் திருமாவளவன் வேண்டுகோள்


திருமாவளவன் | கோப்புப் படம்

சென்னை: மது, போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச் சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தனது பிறந்தநாள் விழாவில் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் விசிக தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் ஏற்புரையில் திருமாவளவன் பேசியதாவது- மனித வளத்தை பாதுகாக்க...: ஊழலை ஒழிப்பதற்கான குரல் நாடெங்கும் ஒலிக்கிறது. சாதியை ஒழிப்பதற்கான குரல் அம்பேத்கர் பெயரிலான இயக்கங்களிடம் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மது மற்றும் போதைப் பொருள் ஒழிக்க வேண்டும் என்ற குரல் பெரிதாக இல்லை. மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக அது மாறிப் போயிருக்கிறது. கஞ்சா, புகையிலை உள்ளிட்டவை ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் சரளமாகப் புழக்கத்தில் உள்ளன. மது மற்றும் போதைப் பொருள் களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சிதைந்துவரும் மனித வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளும் கட்டாயம் நமக்கு இருக்கிறது.

பிறந்த நாள் கருப்பொருள்: ஆண்டுதோறும் பிறந்தநாளின் போது ஏதேனும் ஒரு கருப் பொருளை முன்வைத்து ஒரு செயல் திட்டத்தை வரையறுப்பது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான செயல் திட்டமாக மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு என்னும் கருப்பொருளை ஏற்கெனவே அறிவித்திருந்தேன். இதை முன்னிறுத்தி அக். 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளில் கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான மகளிர்மாநாடு நடத்த இருக்கிறோம் எனவும் அண்மையில் அறிவித்தேன். இதற்காக லட்சக் கணக்கான பெண்களைத் திரட்ட வேண்டும்.

தொண்டர்களின் நம்பிக்கை: இதையொட்டி, மண்டல வாரியாக மக்களை சந்தித்து உரையாற்ற இருக்கிறேன். மாநாட்டுக்குப் பிறகு கட்சியின் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும். 12 மணி நேரமாக அரங்கில் அமர்ந்து விழாவை சிறப்பித்திருக்கும் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகளுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி. என் மீதான தொண்டர்களின் நம்பிக்கைக்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன். கவியரங்கம், வாழ்த்தரங்கம் உள்ளிட்டவற்றில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

x