மருத்துவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்: அன்புமணி, ஜி.கே.வாசன், சீமான் கோரிக்கை


சென்னை: மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

அன்புமணி: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மனிதத் தன்மையற்ற, மிருகத்தனமான இந்த செயல் மன்னிக்க முடியாதது.

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறை கண்டுபிடிக்காததும் மருத்துவர்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. அதிக எண்ணிக்கையில் பெண்கள் முதுநிலை மருத்துவம் பயிலக் கூடிய இன்றைய சூழலில்இரவுநேரப் பணிகள் பாதுகாப்பற்றவையாகவே உள்ளன.

எனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன்: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர்ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. மருத்துவம் படிக்கும் மாணவிகள் மத்தியில் ஓர்அச்சத்தை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளதால் பெண்கள் படிக்கும் கல்லூரிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க மத்திய, மாநிலஅரசுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சீமான்: கொல்கத்தா அரசுமருத்துவமனையில் பெண் பயிற்சிமருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது. மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்வது கண்டனத்துக்குரியது.

மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்களின் உயிரைக் காக்க வேண்டியது மாநில அரசுகளின் தலையாயக் கடமை. இதை உணர்ந்து மருத்துவமனைகள் அனைத்தும், உரிய பாதுகாப்புடன் இயங்குவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

x