தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த 710 பேருந்துகள் நாளை (ஜனவரி 30) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், " கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஜன.24-ம் தேதி முதல் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக நாளை முதல் அனைத்து போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் 710 பேருந்துகளும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். இந்த பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாளை முதல் இயக்கப்பட மாட்டாது.
ஈசிஆர் வழியாக செல்லும் பேருந்துகளும், பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர், திருப்பத்தூருக்குச் செல்லும் பேருந்துகளும் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
மேற்கண்ட பேருந்து இயக்கம் மாற்றத்தில் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும்போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 160 பேருந்துகள் இயக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.