மகளிர் உரிமைத் தொகை குறித்த வதந்தி: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்களால் பரபரப்பு


வாட்ஸ்அப்பில் வந்த வதந்தி

கோவை: மகளிர் உரிமைத் தொகை குறித்த வதந்தி தகவலை நம்பி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் குவிந்தனர்.

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 அரசு சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 கோடிக்கு மேலான பயனாளிகள் பெற்று வருகின்றனர்.மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்கப் பெறாதவர்கள், புதிதாக குடும்ப அட்டையைப் பெற்றவர்கள் உள்ளிட்டோர் மீண்டும் விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மகளிர் உரிமை தொகை தொடர்பாக வாட்ஸ் அப்பில் போலியான தகவல் பரவியது. அதில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 17, 19, 20 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. எனவே, மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பெறுவதற்கான மனுக்களை உடனடியாக கொடுக்கவும். உடனே அனைவருக்கும் கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தகவலை நம்பி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் இன்று காலை குவிந்தனர். இதுகுறித்து அப்பெண்கள் கூறும்போது, “மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தும் இதுவரை எங்களுக்குப் பணம் கிடைக்கவில்லை. சிறப்பு முகாமில் பணம் கிடைக்கும் என்று நம்பி வந்தோம்” என்றனர்.

இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் எதுவும் நடக்கவில்லை என அதிகாரிகள் விளக்கம் கூறி அனுப்பி வைத்தனர். வாட்ஸ் அப்பில் வந்த போலியான தகவலை நம்பி வந்த பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனிடையே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. போலியான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x