விருதுநகர் புதிய பேருந்து நிலையம் 21-ம் தேதி முதல் முழுமையாக செயல்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


பேருந்து நிலையம்

விருதுநகர்: விருதுநகர் புதிய பேருந்து நிலையம் இம்மாதம் 21-ம் தேதி முதல் முழுமையாக செயல்படத் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'விருதுநகரில் புதிய பேருந்து நிலையத்தை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 27ம் தேதி விருதுநகர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதன்படி விருதுநகரில் இருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படும் நகர், புறநகர் பேருந்துகள், மற்றும் பிற ஊர்களில் இருந்து விருதுநகர் வழியாக இயக்கப்படும் நகர மற்றும் புறநகர பேருந்துகளை பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கவும், புதிய பேருந்து நிலையத்தை இம்மாதம் 21-ம் தேதி முதல் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் விவரம்: கோவில்பட்டி, திருநெல்வேலி, மதுரை, கள்ளிக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, ராஜபாளையம் முதல் ராமேஸ்வரம் மார்க்கம்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் விவரம்: சிவகாசி, காரியாபட்டி, வடமலைக்குறிச்சி. திருமங்கலம். பேரையூர், அருப்புக்கோட்டை.

மேலும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மற்றும் வழியாக இயக்கப்படும் பேருந்துகளை முழுமையாக ஆய்வு செய்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கணபதி மில் சந்திப்பு பகுதியில் காவல் கட்டுபாட்டு அறையில் தொடர்ச்சியாக போதுமான காவலர்களை பணியில் அமர்த்தவும், அரசு- தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் தலா ஒரு டைம் கீப்பர் பணி அமர்த்தப்பட்டு காலநேர பதிவேட்டினை முறையாக பராமரிக்கவும் வேண்டும்.

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பதிவேடுகளை அவ்வப்போது ஆய்வு செய்து புதிய பேருந்து நிலையத்திற்குள் வராமல் சென்ற பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணபதி மில் சந்திப்பு பகுதியில் போதிய வெளிச்சம் ஏற்படுத்திட தற்காலிகமாக விருதுநகர் நகராட்சி மூலமாக மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. எனவே, திட்டமிட்டபடி புதிய பேருந்து நிலையம் இம்மாதம் 21ம் தேதி முதல் முழுமையாக செயல்படத் தொடங்கும்’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x