அரியலூர்: கொல்கத்தா மருத்துவ மாணவி விவகாரத்துக்கு நீதி கேட்டு அரியலூரில் மருத்துவ மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அரியலூர் அண்ணா சிலை அருகே, மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று (ஆக.17) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவம் பயிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் நேற்று (ஆக.16) மருத்துவக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.