திருவாரூரில் மர இழைப்பகத்தில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்


திருவாரூர்: திருவாரூரில் மர இழைப்பகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே பேபி டாக்கிஸ் ரோடு பகுதியில் கலியபெருமாள் என்பவர் என்விடி மர இழைப்பகம் என்ற பெயரில் மர இழைப்பகம் மற்றும் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த மர இழைப்பகத்தில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், இரண்டு தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரை எடுத்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், மர இழைப்பு நிறுவனத்தில் இருந்த தேக்கு மரங்கள், பர்னிச்சர்கள், ஸ்கூட்டி உள்ளிட்ட வாகனம் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆற்றில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டிருக்கும் நிலையில், தீயணைப்பு வாகனம் தண்ணீரை வேகமாக எடுத்து வந்து தீயை அணைக்க உதவியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து குறித்து திருவாரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x