கும்பகோணம்: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவரின் கொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் மருத்துவர்கள் 24 மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் - சென்னை சாலையில் உள்ள இந்திய மருத்துவ கழக அலுவலகம் முன்பு கும்பகோணம் இந்திய மருத்துவ கழக கிளை மருத்துவர்கள் சார்பில் சனிக்கிழமை (ஆக.17) காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) காலை 6 மணி வரை 24 மணி நேர மருத்துவப் பணிகளைப் புறக்கணித்து கருப்பு வில்லை அணிந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு கும்பகோணம் கிளைத் தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் சாம்பசிவம், கிளைப் பொருளாளர் சுஜன், நிர்வாகிகள் பாலகணேஷ், நாகராஜ், தியாகராஜன், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநிலத் தலைவர் கனகசபாபதி கண்டன உரையாற்றினார்.
கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஆகிய 4 வட்டங்களின் 150 மருத்துவமனைகளில் உள்ள 375 மருத்துவர்கள் பங்கேற்று, கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதையும், சேவை மருத்துவர்கள் மீதான கொலை வெறி தாக்குதலைக் கண்டித்தும், நீதி கேட்டும் 24 மணி நேர பணிபுறக்கணிப்பு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்டன முழக்கமிட்டனர்.