கோவையில் பெய்த தொடர் மழையால் மாநகர சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்!


கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் தேங்கிய மழைநீரில் சென்ற வாகனங்கள்.(அடுத்தபடம்) கோவை சுங்கம் பகுதியில் கொட்டிய மழை. படங்கள்: ஜெ.மனோகரன்.

கோவை: கோவையில் நேற்று மதியத்துக்கு பிறகு பெய்த தொடர் மழையின் காரணமாக, சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் மிதமாகவும், சில நேரங்களில் கன மழையாகவும் பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை மாநகரில் நேற்று காலை நேரத்தில் வெப்பம் நிலவியது. மதியத்துக்கு பிறகு வானிலை மாறியது. குளிர்ந்த சூழல் நிலவியது. சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. முதலில் மிதமான அளவில் தொடங்கிய மழை அடுத்த சில நிமிடங்களில் கனமழையாக கொட்டியது.

உக்கடம், சிங்காநல்லூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், பீளமேடு, ஹோப்காலேஜ், நஞ்சுண்டாபுரம், காந்திபுரம், சாயிபாபாகாலனி, கணபதி, போத்தனூர், சுந்தராபுரம், சேரன் மாநகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல், கோவை புறநகரின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. சில மணி நேரத்துக்கு பின்னர், மழையின் வேகம் தணிந்தாலும், மிதமான அளவில் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

இதன் காரணமாக, மாநகரில் பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். பெரிய கடை வீதி லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் கீழ் பணிகள் நடப்பதால் ஒரு வழித்தடம் அடைக்கப்பட்டது. இதன் காரணமாகவும், அங்கு தேங்கிய மழை நீராலும் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் தேங்கிய இடங்களுக்கு சென்று தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

புலியகுளம் பகுதியில் ஒரு வீட்டின் மீது முறிந்து விழுந்த வேப்பமரம்.

மரங்கள் முறிந்து விழுந்தன: கனமழையின் காரணமாக புலியகுளத்தில் பழமையான வேப்ப மரம் சரிந்து விழுந்ததில் ஓட்டு வீடு சேதமடைந்தது. மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒரு மரம் முறிந்து விழுந்தது. ராமநாதபுரத்தில் தனியார் பள்ளி அருகே 2 மரங்கள் முறிந்து விழுந்தன. நீலிக் கோணாம் பாளையத்தில் ஒரு மரம் முறிந்து விழுந்தது. இந்த மரங்களை தீயணைப்புத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்.

நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): பீளமேடு- 1.60 , பி.என்.பாளையம் - 30.80, மேட்டுப்பாளையம் 37, பில்லூர் அணை- 10, அன்னூர்-31, சூலூர் - 3.20, சிறுவாணி அடிவாரம்-30, சின்கோனா 66, சின்னக்கல்லாறு - 122, வால்பாறை பிஏபி -80, வால்பாறை தாலுகா-54, சோலையாறு-25 மில்லி மீட்டர்.

x