தூத்துக்குடியில் திடீர் கன மழை: குளம்போல் மாறிய சாலைகள், வாகன ஓட்டிகள் பாதிப்பு


தூத்துக்குடியில் நேற்று பெய்த திடீர் மழையால் குளம்போல் மாறிய பாளையங்கோட்டை சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. | படம்: என்.ராஜேஷ் |

தூத்துக்குடி/ கோவில்பட்டி/ திருநெல்வேலி/ தென்காசி: தூத்துக்குடியில் நேற்று திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாயினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி பகுதியில் நேற்று காலையில் கடும் வெயில் வாட்டியது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர் மதியம் திடீரென வானில் மேக மூட்டம் திரண்டது. தூத்துக்குடி மாநகரில் 3-வது மைல் முதல் கோரம்பள்ளம் வரையிலான புறநகர் பகுதிகளில் பகல் 12.15 மணி அளவில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1.45 மணி நேரம் மழை நீடித்தது. தூத்துக்குடி மாநகர பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இதனால் இந்த பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. பாளையங்கோட்டை சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை வெயிலடித்த நிலையில், மதியம் ஒரு மணிக்கு மேல் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து 2 மணியிலிருந்து 3 மணி வரை மழை பெய்தது. இதன் காரணமாக மந்தித்தோப்பு சாலை, புது ரோடு விலக்கு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கு பகுதியில் சுமார் 100 அடி தொலைவில் சாக்கடை கழிவுநீர் செல்லும் ஓடையில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டிருந்ததால், மழைநீருடன் கழிவு நீரும் கலந்து பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. சாலையில் சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை நீடிக்கிறது. நேற்று காலை 8 மணி வரையின 24 மணி நேரத்தில் நாலுமுக்கில் 4 மி.மீ., காக்காச்சி மற்றும் ஊத்து பகுதியில் தலா 2 மி.மீ., மாஞ்சோலையில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 112 அடியாக இருந்த நிலையில் அணைக்கு விநாடிக்கு 226 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,154 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 69.27 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 19.9 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 2 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தின் பிற இடங்களில் மழை இல்லை. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக கொட்டியது.

x