கோவை மாவட்டம் வால்பாறை அருகே சுற்றுலா சென்ற மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 10 பேர் ஐந்து இருசக்கர வாகனங்களில் வால்பாறை மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
மதியம் ஹோட்டலில் உணவு அருந்தி விட்டு, முடீஸ் அருகே உள்ள நல்லகாத்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மாணவர்கள் சுழலில் சிக்கிக் கொண்டனர். இதில், கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து ஆற்றில் மூழ்கிய மாணவர்களை மீட்கும் பணி தொடங்கியது.
பின்னர் உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடன் வந்த மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த நபில், வினித் குமார், தனுஷ், அஜய், சரத் ஆகிய ஐந்து பேர் என்று தெரியவந்தது.
இந்நிலையில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி 5 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.