நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி திமுக சார்பில் நாளை மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்படுகிறது.
மருத்துவக் கல்வி பயில்வதற்கு நீட் தேர்வு அவசியம் என்று மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாபெரும் கையெழுத்து இயக்கத்தை திமுக நாளை தொடங்குகிறது. மாணவர்கள், பெற்றோர்களிடம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அதன்படி ஒவ்வொரு மாவட்ட திமுக சார்பிலும் நாளை அந்தந்த மாவட்டங்களில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட செயலாளர்கள் தொடங்கி வைக்கின்றனர். சென்னை கலைவாணர் அரங்கத்தில் திமுக மாணவர் அணியின் சார்பில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு, சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மாணவர் அணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் தலைமையில் நடைபெறும். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நீட் தேர்வு எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் அண்ணன் மணிரத்னம், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மதிவதனி, ஊடகவியலாளர் செந்தில்வேல், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டவர்கள் பங்கேற்கிறார்கள்.
சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!
செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!