டி.டி.வி.தினகரன் திவாலானவர் என அறிவித்த அமலாக்கத்துறையின் நோட்டீஸ் ரத்து!


டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன் திவாலானவர் என அறிவித்த அமலாக்கத்துறையின் நோட்டீஸை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக, 1995-96 காலகட்டத்தில் பெற்றதாகவும், பின்னர் அந்தத் தொகையை இங்கிலாந்திலுள்ள நிறுவனங்களுக்குச் சட்டவிரோதமாக மாற்றியதாகவும், அமமுக பொதுச்செயலாளரான முன்னாள் எம்.பி டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர், அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் எனும் ஃபெரா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 1998-ம் ஆண்டு டி.டி.வி.தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையம்,` 31 கோடி ரூபாய் அபராதத்தை, 28 கோடி ரூபாயாகக் குறைத்து’ உத்தரவிட்டது.

இந்த அபராதத்தை செலுத்தாததால் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸை எதிர்த்து தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தினகரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகக் கூறி, அதை ரத்துசெய்து 2003-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005-ல் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வில் கடந்த ஆகஸ்ட் 21-ல் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ஃபெரா சட்டத்தின்கீழ் தினகரனுக்கு விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்திருக்கும் நிலையில், பல ஆண்டுகளாக அதைச் செலுத்தாமல் காலதாமதம் செய்துவருவதால், அவரை திவாலானவர் என அறிவிக்கக் கோருவதில் சட்டப்படி எந்தத் தடையும் இல்லை என விளக்கமளித்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த டி.டி.வி.தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``திவாலானவர் என அறிவிக்க அது உரிமையியல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என நீதிமன்றமும் உறுதி செய்திருப்பதால், அபராதத்தை செலுத்தவில்லை என்பதற்காக திவாலானவர் என அறிவிக்கும்படி கோர முடியாது”, என வாதிட்டார். இந்த வழக்கில் வாதம் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், டி.டி.வி.தினகரன் திவாலானவர் என அறிவித்த அமலாக்கத்துறையின் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

x