முதலீடுகளை ஈர்க்க ஆக. 27-ல் அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்: 17 நாட்கள் சுற்றுப்பயணம்


சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆக.27-ம் தேதி அமெரிக்கா செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அங்கு தங்குகிறார்.

முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் அமெரிக்கா செல்வார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வரும் 27-ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்லும் முதல்வர், அங்கு 17 நாட்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு, செப்.12-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

பயணத்தின்போது, சர்வதேசஅளவில் உள்ள 500 நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யும் வகையில், முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்தப் பயணத்தின்போது, முதல்வர் ஸ்டாலின் ஆக. 28-ம்தேதி சான்பிரான்சிஸ்கோ செல்கிறார். அங்கு செப்.2-ம் தேதி வரை தங்கியிருந்து முன்னணி நிறுவன தலைவர்களைச் சந்திக்கிறார். மேலும், ஆக. 28-ம் தேதிசான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். ஆக. 31-ம் தேதி புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து, செப்.2-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். அங்கு 12-ம் தேதி வரை முன்னணி நிறுவனமுதலீட்டாளர்களைச் சந்தித்து, முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறார். அங்கு, 500 சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

இதற்கிடையே, செப். 7-ம் தேதி அயலகத் தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்

x