கோத்தகிரி அருகே அரசு பேருந்து மீது மின் கம்பி உரசி ஓட்டுநர் உயிரிழப்பு


கோத்தகிரி: கோத்தகிரி அருகே அரசுப் பேருந்துமீது உயரழுத்த மின் கம்பி உரசியதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கெங்கரை பகுதியில் உள்ள கூட்டடா கிராமத்துக்கு தினமும் கோத்தகிரி பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப்பேருந்து கூட்டடா கிராமத்தில்இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, காலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோரின் நலன் கருதி இயக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு கோத்தகிரியில் இருந்து கூட்டடா கிராமத்துக்கு வந்த அரசுப் பேருந்து, அந்த கிராமத்தில் நிறுத்தப்பட்டது. நேற்று காலை பேருந்தை ஓட்டுநர் பிரதாப் கோத்தகிரியை நோக்கி ஓட்டி வந்துள்ளார்.

கெங்கரை அடுத்துள்ளகோவில் மட்டம் பகுதியில் அரசுப் பேருந்து வந்துகொண்டிருந்தபோது, அதிக மேகமூட்டம் காரணமாக உயரழுத்த மின் கம்பி தாழ்வாக இருந்தது தெரியவில்லை. அப்போது அந்த மின்கம்பி, அரசுப் பேருந்து மீது உரசியது. இதனால் பேருந்தின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

உடனே சுதாரித்த ஓட்டுநர் பேருந்தை சாலையிலேயே நிறுத்தி, பயணிகளை இறக்கிவிட்டார். பின்னர், அவரது இருக்கையின் அருகில் உள்ள கதவு வழியாக இறங்கும்போது, எதிர்பாராதவகையில் மின்சாரம் பாய்ந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம்: தமிழக முதல்வர் ஸ்டாலின்வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உயிரிழந்த ஓட்டுநர் பிரதாப் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், அவரது குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்

x