பட்டா நிலத்தில் மணல் குவாரிக்கு அனுமதி: தூத்துக்குடி ஆட்சியர், வட்டாட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு


மதுரை: தனியார் பட்டா நிலத்தில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செக்காாரக்குடியைச் சேர்ந்த பி.லெட்சுமி மாணிக்கம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "செக்காரக்குடி கிராமத்தில் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு நெல், கரும்பு, பருவ காலப் பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. மழையை நம்பி விவசாயம் நடைபெறும் பகுதியாக இருப்பதால் முன்னோர்கள் விவசாய நிலங்களில் சிறு, சிறு குளங்களை உருவாக்கினர். எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் சேகரமாகும் நீரை வைத்தே நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.

இந்நிலையில், எங்களுக்குச் சொந்தமான குளத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் வண்டல் மண் அள்ள தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளப்பட்டு தனியார் காற்றாலைகளுக்கு விற்கப்படுகிறது. தனியார் பட்டா நிலத்தில் வண்டல் மண் குவாரி நடத்த மாவட்ட ஆட்சியர், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அனுமதி வழங்கியது சட்டவிரோதம். இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தேன்.

அந்த வழக்கில் தனியார் பட்டா இடத்தில் மண் குவாரிக்கு அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியரின் நடவடிக்கையை கண்டித்தும், வண்டல் மண் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தும், நான் உட்பட பட்டாதாரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீட்டை 6 வாரத்தில் வழங்கவும் 22.12.2023-ல் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு இதுவரை செயல்படுத்தப்படவில்லை. எனவே, வருவாய் செயலாளர் அமுதா, நில நிர்வாக ஆணையர் கே.சி.பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.கே. மகேஷ்ராஜா வாதிட்டார். பின்னர் நீதிபதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆகஸ்ட் 20க்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

x