திருநெல்வேலி: அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சாதி ரீதியிலான பாடல்களை ஒலிபரப்பக்கூடாது என்றும், மாணவர்கள் மோதிக்கொண்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மாணவர்களிடையே அவ்வப்போது சாதி ரீதியிலான மோதல் ஏற்பட்டு வருகிறது. பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் மாணவர்கள் இடையே நடைபெறும் இத்தகைய மோதலை தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உடனான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாணவர்களிடையே நடைபெறும் மோதல் குறித்த தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்துவது போன்ற சந்தேகம் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்களிடையே நடைபெறும் சிறு, சிறு மோதல்கள் குறித்த தகவல்களை காவல் துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்கவும், சாதி ரீதியிலான மோதலை தடுக்கும் வகையிலும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மாநகரப் பகுதிகளில் பேருந்துகளில் சாதி ரீதியிலான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்றும், அது போன்ற பாடல்களை அழித்துவிட வேண்டும் என்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதை மீறி சாதி ரீதியான பாடல்களை பேருந்துகளில் ஒலிபரப்பினால் ஒட்டுநர், நடத்துநர் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் ரோந்து: இதனிடையே மாநகர பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு ரோந்து பணியை மேற்கொள்ள காவல் துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் ரோந்து பணியை தொடங்கியுள்ளனர். இவர்கள் மகாராஜா நகர் பகுதியில் உள்ள பள்ளிகளிலும் பாளையங்கோட்டை, பெருமாள்புரம் பகுதிகளில் கல்லூரிகள் அமைந்துள்ள இடங்களிலும் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.