கும்பகோணம்: வீட்டு மனைப் பட்டா வழங்கி 10 வருஷமாகியும் இடம் ஒதுக்காததால் கிராம மக்கள் போராட்டம் அறிவிப்பு


கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், உக்குடி மற்றும் திருலோகியில் வசிக்கும் 110 பேருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை இடம் ஒதுக்கித் தரவில்லை. இதனைக் கண்டித்து, வரும் 28ம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போரட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

உக்குடியில் 25 பேருக்கு, திருலோகியில் 85 பேருக்கு என மொத்தம் 110 பேருக்கு, கடந்த 2011, 2013ம் ஆண்டுகளில் 2 கட்டமாக தமிழக அரசின் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, தங்களுக்கான இடத்தை ஒதுக்கித் தரக்கோரி, வீட்டுமனை பெற்ற மக்கள் தாலுகா அலுவலகத்துக்கு நடையாய் நடந்தும் எதுவும் நடக்கவில்லை. இடத்தையும் ஒதுக்கித் தராமல் மக்களின் கோரிக்கைக்கு உரிய பதிலையும் சொல்லாமல் வருவாய் துறையினர் கடந்த பத்து வருடங்களாக கால தாமதம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கிராமங்களைச் சேர்ந்த செந்தில், கலைவாணன் ஆகியோர் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் ச.ஜீவ பாரதி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் பி.சாமிக் கண்ணு உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோர், திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், பட்டாதாரர்களுக்கு இடம் ஒதுக்கித் தரக்கோரி இன்று மனு அளித்தனர்.

அந்த மனுவில்,"சுமார் 10 ஆண்டுகளாக அரசு வழங்கிய இவலச மனைப் பட்டாவுக்கான இடம் ஒதுக்கித் தருமாறு நாங்கள் கேட்டும் எந்தப் பலனும் இல்லை. அதனால் ஆகஸ்ட் 28ம் தேதி, திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவுக்கு பதிலளித்த வருவாய்த்துறையினர், "உடனடியாக இடம் ஒதுக்கித் தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளனர்.

x