கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த 19 வயது பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பணத்தாசை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
19 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையின் எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதம் இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அந்த பெண்ணை காணவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், அந்த பெண் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருப்பதாக உறவினர்கள் மூலம் தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவரிடம் விசாரித்த போது, தன்னை பலரும் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். போலீஸாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. திருமணமான சில நாட்களிலேயே கணவன், மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, அப்பெண் தனியே வசித்து வந்துள்ளார்.
அப்போது சிவனேஷ் பாபு (39) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறிய அவர், தனியாக வீடு எடுத்து பெண்ணை தங்க வைத்தார். பின்னர் தனது நண்பர் எனக் கூறி, வீட்டிற்கு ராகுல் (38) என்பவரை அழைத்து வந்ததாக தெரிகிறது.
பின்னர் இருவரும் இளம்பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் ராகுலின் நண்பர் செந்தில்குமார் (35) என்பவரை புரோக்கராக பயன்படுத்தி பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அப்பெண் அங்கிருந்து தப்பித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், ராகுல், புரோக்கர் செந்தில் குமார் ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சிவனேஷ் பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.