மழையால் பாதிக்கப்பட்ட பருத்திக்கு நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை


சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஆண்டு பருத்திக்கு லாபகரமான விலை கிடைக்காத நிலையில், நடப்பாண்டு 3-ல் ஒரு பங்கு பரப்பளவே பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பருத்தி வயல்களை தண்ணீர் சூழ்ந்ததால், செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பருத்தி காய்களும் வெடித்து வந்த நிலையில், மழை நீர் கோர்த்து நிறம் மாறியதால் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளன.

எனவே, வேளாண் அலுவலர்கள் மூலம் கள ஆய்வு நடத்தி, விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.இதேபோல,தமாகா தலைவர் ஜி.கே.வாசன்வெளியிட்டுள்ள அறிக்கையில், "மழையால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.