அடுத்த வியூகம்... போயஸ் கார்டனில் குடியேறுகிறார் சசிகலா... ’வேதா இல்லம்’ எதிரே... புது பங்களாவில் இன்று கிரகப்பிரவேசம்!


சசிகலா புதிய வீடு

சென்னை போயஸ் கார்டனில் சசிகலாவின் புதிய பங்களாவின் கிரகப்பிரவேசம் இன்று காலை நடைபெற்றது.

கிரஹபிரவேச பூஜையில் சசிகலா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே சசிகலா 3 மாடிகளுடன் கூடிய பங்களாவை புதிதாக கட்டியுள்ளார். சசிகலாவின் புதிய இல்லத்தின் கிரகப்பிரவேசத்தில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முன்னதாக வேதா இல்லத்தின் வாசலில் உள்ள விநாயகர் கோயிலில் சசிகலா வழிபாடு நடத்தினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சுதாகரன் தவிர்த்து சசிகலா, இளவரசி ஆகியோர் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார்.

கிரகபிரவேச பூஜையில் சசிகலா

ஜெயலலிதா உடன் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் கார்டனில் இருந்த வேதா நிலையம் இல்லத்தில் சசிகலா இருந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு பிறகு அது அரசுக்கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிற்கு வேதா நிலையம் இல்லம் சென்றது. ஆனாலும், போயஸ் கார்டனை விட்டு செல்ல மனமில்லாத சசிகலா, வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகளை சசிகலா கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கினார்.

சசிகலா புதிய வீடு

சிறை விடுதலைக்கு பிறகு அரசியல், ஆன்மிக பயணம் என தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள சசிகலா, அவ்வபோது, தனது ஆதரவாளர்களையும் சந்தித்து வருகிறார். மேலும், பிரிந்து கிடக்கும் அதிமுகவை இணைப்பதே தனது நோக்கம் என்றும் கூறி வரும் சசிகலா, அதற்கான அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், போயஸ் கார்டனில் தான் கட்டி வந்த வீட்டின் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் புதிய இல்லத்தில் சசிகலா பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

x