மகளிர் ஆணைய பதவியில் இருந்து விலகியது ஏன்? - குஷ்பு விளக்கம்


சென்னை: கட்சி பணி செய்வதற்காக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன் என நடிகை குஷ்பு தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்றுசுதந்திர தின விழா நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்பதற்காக கமலாலயம் வந்த நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பில் இருந்தபோது, கட்சி சார்பில் என்னால் எந்த பணியிலும் ஈடுபட முடியவில்லை. மேலும், கமலாலயம் பக்கமும் வர முடியவில்லை. தற்போது ஒன்றரை ஆண்டுகள் கழித்து இங்கு வந்திருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சி சார்பில் உழைக்க வேண்டும். வேலை செய்ய வேண்டும். பாஜக நிர்வாகியாக பணியாற்ற வேண்டும் என்ற ஆசைஎனக்கு இருந்தது. என்னுடைய கவனம் முழுவதும் அரசியலில்தான் இருக்கிறது. தற்போது அப்பதவியை ராஜினாமா செய்த பிறகு சுதந்திரமாக கட்சி பணிகளில் என்னால் ஈடுபட முடியும்.

ராஜினாமா செய்வதற்காக எனக்கு யாரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ராஜினாமா குறித்து 6 மாதங்களுக்கு முன்பே நான் மேலிடத்தில் பேச ஆரம்பித்து விட்டேன். ஆனால், அவர்கள் கொஞ்சம் அவகாசம் கேட்டார்கள். இந்நிலையில், கடந்த மாதம் நான் ராஜினாமா கடிதத்தை வழங்கினேன். தற்போது எனது ராஜினாமா கடிதத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். 2026 சட்டப்பேரவை தேர்தலை மையமாக வைத்து, தனிப்பட்ட லாபத்துக்காக நான் ராஜினாமா செய்யவில்லை. கட்சி பணியில் ஈடுபட வேண்டும். நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காகதான் ராஜினாமா செய்திருக்கிறேன்.

நான் ராஜினாமா செய்த பிறகு திமுகவினருக்கு என் மீது பயம் வந்துவிட்டது. கட்சி சார்பில் பேச முடியாதபோதே, நான் துணிந்து அவர்களை எதிர்த்து பேசியிருக்கிறேன். இப்போது நான் கட்சி சார்பில் அதைவிட அதிகமாக பேசுவேன். அதைக் கண்டு திமுகவினர் பயப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்

x