சென்னை கோயில்களில் சமத்துவ விருந்து: அமைச்சர்கள், பொதுமக்கள் பங்கேற்பு


சென்னை: 78-வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நிகழ்ச்சிகளில் தமிழக அமைச்சர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சென்னையில் உள்ள முக்கிய கோயில்களில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்து கொண்டு பொதுமக்களோடு அமர்ந்து உணவு அருந்தினர்.

தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியாராஜன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கோயில் செயல் அலுவலர் சி. நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயிலில் சட்ட பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அடையாறு அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர்பெரியசாமி, திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெசன்ட் நகர் மகாலட்சுமிகோயிலில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வடபழனி முருகன் கோயிலில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயிலில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திருவட்டீஸ்வரன் பேட்டை திருவட்டீஸ்வரர் கோயிலில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறைஅமைச்சர் சு.முத்துசாமி, காளிகாம்பாள் கோயிலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், திருவான்மியூர் பாம்பன் சுவாமிகோயிலில் குறு, சிறு மற்றும்நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்பட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் பங்கேற்றனர்

x