திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு


கோப்புப் படம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி, சிவகாசியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிர் இழந்தனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்திபெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ெசய்ய வருகின்றனர்.

இதேபோல, சிவகாசி பள்ளப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகள்களான கல்லூரி மாணவி மேனகா (18), 11-ம் வகுப்பு மாணவி சோலை ஈஸ்வரி (15) உள்ளிட்ட 25 பேர் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு நேற்று வந்தனர். கோயில் அருகேயுள்ள தாமிரபரணி ஆற்றில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.

எதிர்பாராதவிதமாக மேனகா, சோலை ஈஸ்வரி ஆகியோர் திடீரென நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த அவர்களது சித்தப்பா வில்லிபுத்தூர் வன்னியம்பாடி சங்கரேஸ்வரன் (40) மற்றும் மாரீஸ்வரன் (28) ஆகியோர் இருவரையும் மீட்க ஆற்றில் இறங்கியுள்ளனர். எனினும், அவர்களும் நீரில் மூழ்கினர். அங்கிருந்த
வர்கள் மாரீஸ்வரனை மீட்டனர். மற்ற 3 பேரும் மாயமானார்கள்.

தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்குப் பின்னர் மேனகா, சோலை ஈஸ்வரி, சங்கரேஸ்வரன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x