விழுப்புரம்: பாமகவுக்கு ஆதரவு கொடுத்தால், பட்டியலினத்தவரை முதல்வராக்குவோம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி கூறினார்.
திண்டிவனம் அருகே கீழ்சிவிரி கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் அன்புமணி கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில், பிரம்மதேசத்தில் செயல்படும் மதுக் கடையைமூட வேண்டும். பிரம்மதேசத்தை திண்டிவனம் வட்டத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது: சொந்த கிராமத்தில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று, மதுக்கடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் இளைஞர்கள் பெரியவர்கள் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து, மதுவில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். இந்திய அளவில் அதிக சாலைவிபத்துகள், கல்லீரல் பிரச்சினை,தற்கொலைகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இவற்றுக்கு முக்கியக் காரணம் மதுப்பழக்கம்தான். தேர்தலின்போது வாக்குறுதி அளிப்பவர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர் எதையும் கண்டு கொள்வதில்லை.
சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகளானபோதும், தரமான கல்வி,சுகாதாரம், வீடு, குடிநீர், மின்சாரம்,வேலைவாய்ப்பு போன்றவை கிடைக்கவில்லை. தமிழகத்தில் 3 தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். கஞ்சாஉள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கும்போது, ஸ்டாலின் தனக்கு அந்த அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார்.
தமிழகத்தில் பட்டியலின சமுதாய மக்கள் பாமகவுக்கு ஆதரவு கொடுத்தால், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்குவோம். 1998-ல் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கியது பாமகதான். திமுக 1999-ல்தான் பட்டியலின சமுதாயத்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கியது. அரசியல் காரணத்துக்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக் கின்றனர். இவ்வாறு அன்புமணி கூறினார்.