கோவை: சுதந்திர தினத்தன்று முன்னறிவிப்பு இல்லாமல் செயல்பட்ட 191 நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “சென்னை, தொழிலாளர் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் சாந்தி அறிவுறுத்தலின்பேரில், கோவை, தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி வழிகாட்டுதலின்படி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் தேசிய விடுமுறை தினமான இன்று (ஆக.15) கோவை மாவட்டத்துக்குட்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 230 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 92 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 99 உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 191 உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தவறு செய்த நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கையை பொறுத்து குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களும் தமிழ், ஆங்கிலம், அவரவர் விரும்பும் பிற மொழிகள் என்ற வரிசையின் கீழ் பெயர் பலகை அமைந்திருக்க வேண்டும். கடைபிடிக்காத நிறுவனங்களுகு்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.