கனமழையால் பர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு: தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு


ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு: தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும், ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில், நேற்று இரவு பெய்த கனமழையினால், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம்- கர்நாடகா இடையே இன்று மதியம் வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, தமிழக - கர்நாடகா எல்லைப் பகுதியில் பர்கூர் மலைப்பகுதி உள்ளது. அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, அந்தியூர்- பர்கூர் கொள்ளேகால் மலைப்பாதையில், செட்டிநொடி என்ற இடத்தில், நள்ளிரவில் மண்சரிவு ஏற்பட்டது.

மேலும், பர்கூர் மலைப்பாதை முழுவதும், 10-க்கும் மேற்பட்ட இடங்களில், சிறிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டு, சாலைகளில் மண் மற்றும் கற்கள் விழுந்தன. அதிக வேகத்துடன் கற்களும், மண்ணும் சரிந்ததால், சில இடங்களில் தார் சாலைகள் பெயர்ந்தன.

இதன் காரணமாக, பர்கூர் சாலையில் நள்ளிரவு முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நள்ளிரவில் மண்சரிவு ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பர்கூர் மலைப்பகுதியில் செல்வதற்காக வந்த வாகனங்கள், வரட்டு பள்ளம் சோதனைச் சாவடி பகுதியில், நிறுத்தப்பட்டன. கர்நாடகத்திலிருந்து வந்த வாகனங்கள் தாமரைக்கரையில் நிறுத்தப்பட்டன. மண்சரிவு ஏற்பட்ட செட்டிநொடி பகுதிக்கு இன்று காலை வந்த நெடுஞ்சாலைத்துறையினர், இயந்திரங்கள் மூலம் மண், கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் இருந்த மண், கற்கள் அகற்றப்பட்ட நிலையில், இன்று மதியத்திற்கு மேல், தமிழகம் - கர்நாடகத்திற்கு இடையே பர்கூர் சாலையில் போக்குவரத்து தொடங்கியது.

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, தமிழக – கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் காத்திருந்தன.

வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு: ஈரோடு மாவட்டத்தில் இருந்து பண்ணாரி - திம்பம் வழியாகவும், அந்தியூர் - பர்கூர் வழியாகவும் கர்நாடகாவைச் சென்றடைய சாலைகள் உள்ளன. இதில், அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநில எல்லையான கர்கேகண்டி சென்று, கொள்ளேகால், மைசூரு சென்றடையலாம்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி திம்பம் சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்பதாலும், போக்குவரத்து நெரிசல் குறைவு என்பதாலும், கர்நாடகா செல்வதற்கு, அந்தியூர் - பர்கூர் சாலையில் அதிக எண்ணிக்கையிலான கனரக வாகனங்கள் பயணிக்கின்றன. 24 மணி நேரமும் போக்குவரத்து தொடர்வதால், சாலையின் தாங்கும் திறன் பாதிப்படைந்து, சாலை வலுவிழந்து காணப்படுகிறது.

சாலை விரிவாக்கம்: இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன் கூறியதாவது: “அந்தியூரில் வனப்பகுதி தொடங்கும் வரட்டுப்பள்ளத்தில் தொடங்கி, தமிழக எல்லையான கர்கேகண்டி வரையிலான 42 கி.மீ. தூர சாலை, ரூ.80 கோடி மதிப்பீட்டில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டது. இந்த சாலை விரிவாக்கத்தின்போது, மரங்கள் வெட்டப்பட்டதோடு, இயந்திரங்களின் பயன்பாடு, பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டது போன்ற காரணங்களால், மண்ணின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், பர்கூர் சாலையில் பாறைகள், மண்சரிவு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 2021-ம் ஆண்டு பெய்த மழையின்போது, ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 6 முறை மண்சரிவும், சாலைகளில் பிளவும் ஏற்பட்டது. இதனால், பர்கூர் ஊராட்சியைச் சுற்றியுள்ள 32 மலைக்கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

பர்கூர் மலை சாலையின் தன்மை குறித்து முறையாக திட்டமிடாததாலும், தொழில்நுட்ப குறைபாடுகளாலும், மண் சரிவுகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நீர் வழிந்தோட போதுமான வடிகால்களை அமைக்காததால், மழை வெள்ளம் சாலையை மூழ்கடித்து ஓடி, பல இடங்களில் சாலையை அரித்துச் செல்கிறது.

எனவே, வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து மண்சரிவுக்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக, அந்தியூர் மற்றும் கர்கேகண்டி பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைத்து, அதிக எடை கொண்ட பாரம் ஏற்றிய வாகனங்கள், நீளமான கனரக வாகனங்களை இந்த சாலையில் இயக்க தடை செய்ய வேண்டும். சாலையை முறையாக பராமரித்து, மழைநீர் சாலைகளில் ஓடாமல் செல்ல வடிகால் வசதிகளை சீர் செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே எச்சரித்த ‘இந்து தமிழ்’ - பர்கூர் சாலை விரிவாக்கப் பணி மற்றும் கனரக வாகன போக்குவரத்தால் பர்கூர் சாலையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது குறித்து கடந்த ஆண்டு ‘இந்து தமிழ்’ நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. தற்போது கேரளமாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு சம்பவத்திற்கு பிறகாவது, பர்கூர் சாலையில் மண் சரிவைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

x